விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,085 வழக்குகளுக்கு தீர்வு


விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,085 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 5:32 PM GMT)

விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான சரோஜினிதேவி தலைமை தாங்கி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். நீதிபதிகள் ஜமுனா, திருமகள், ஜெயமங்கலம், காஞ்சனா, உத்தமராஜ், கயல்விழி, கவிதா, மும்தாஜ், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. மொத்தம் 15,756 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தண்டபாணி, வக்கீல்கள் விஜயகுமார், வேலவன், ராதாகிருஷ்ணன், காமராஜ், சுந்தரம், சவரி, துரைமுருகன், திருஞானசம்பந்தம், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் அரிதாஸ், வேலழகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இதன் முடிவில் மொத்தம் 3,085 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.8 கோடியே 21 லட்சத்து 84 ஆயிரத்து 464-க்கு தீர்வு காணப்பட்டது.

Next Story