விழுப்புரம் அருகே டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது 300 மதுபாட்டில்கள் உடைந்து சேதம்


விழுப்புரம் அருகே டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது 300 மதுபாட்டில்கள் உடைந்து சேதம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 6:07 PM GMT)

விழுப்புரம் அருகே டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் 300 மதுபாட்டில்கள் உடைந்து சேதமடைந்தன.

விழுப்புரம், 

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கண்ணபிரான்புரம் என்ற இடத்தில் இருந்து கடலூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு சப்ளை செய்வதற்காக 1,015 பெட்டிகள் கொண்ட 48,720 மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.

இந்த லாரியை அச்சரப்பாக்கத்தை சேர்ந்த மஞ்சினீஸ்வரன் (வயது 49) என்பவர் ஓட்டிச்சென்றார். கிளனராக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (38) என்பவர் இருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் விழுப்புரத்தை அடுத்த கப்பியாம்புலியூர் அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், லாரியை முந்திச்செல்ல முயன்றது.

இதையறிந்ததும் அந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக லாரியை இடதுபுறமாக டிரைவர் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்த சுமார் 300 மதுபாட்டில்கள் உடைந்து சேதமானது. லாரி டிரைவரும், கிளனரும் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து மாற்று லாரியை வரவழைத்து அந்த லாரியில் மதுபாட்டில்களை ஏற்றி கடலூருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அதன் பிறகு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான லாரி, பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.

Next Story