என்.எல்.சி. 3-வது சுரங்கத்துக்கு நிலம் கொடுக்க மாட்டோம் 40 கிராம மக்கள் அறிவிப்பு


என்.எல்.சி. 3-வது சுரங்கத்துக்கு நிலம் கொடுக்க மாட்டோம் 40 கிராம மக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:30 PM GMT (Updated: 8 Dec 2018 6:12 PM GMT)

என்.எல்.சி. 3-வது சுரங்கத்துக்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று 40 கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரி விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே 2 சுரங்கங்களில் இருந்து தேவைக்கு ஏற்ப நிலக்கரியும் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்காக சுரங்கங்களை என்.எல்.சி. நிர்வாகம் விரிவுபடுத்தி வருகிறது. விரிவாக்கத்திற்காக அப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-வது சுரங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த சுரங்கத்தை கம்மாபுரம் ஒன்றியம் மற்றும் புவனகிரி ஒன்றியத்தில் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் அமைப்பதற்காக 2 ஒன்றியங்களில் உள்ள புத்தூர், சிறுவரப்பூர், கோட்டிமுலை, சின்ன கோட்டிமுலை, பெருந்துறை, ஒட்டிமேடு, அகரஆம்பாடி, ஆதனூர், சின்னநெற்குணம், பெரியநெற்குணம் உள்பட 40 கிராமங்களும், அப்பகுதி யில் உள்ள விவசாய நிலங்களும் கையகப்படுத்தப் பட உள்ளது.

3-வது சுரங்கம் அமைக்கும் திட்டம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்த கருத்துக்கேட்பு கூட்டத் தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குமாறு என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ஆட்டோ வில் ஒலி பெருக்கி மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூல மாகவும் 40 கிராமங்களிலும் அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த நிலையில் 40 கிராம மக்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் ஆலோசனை கூட்டம் அகர ஆலம்பாடி கிராமத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு அகரஆலம்பாடியை சேர்ந்த வேல்முருகன் தலைமை தாங்கினார். முக்கிய பிரமுகர்கள் சிவப்பிரகாசம், குணசேகரன், வேல்முருகன், அன்பழகன், ராமமூர்த்தி, துரைராஜி, செல்வராஜி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் வரவேற்றார்.

கூட்டத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் வருகிற 11-ந் தேதி நடத்தும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது, அந்த கூட்டத்தில் 3-வது சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பது, 3-வது சுரங்கம் அமைக்க நிலம் கொடுக்க மாட்டோம் என்று 40 கிராம மக்களும் உறுதியுடன் கூறுவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story