நெல்லையில் ஜவுளிக்கடை அதிபர் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக வருமானவரி ஆலோசகர் உள்பட 2 பேர் மீது வழக்கு
நெல்லையில் ஜவுளிக்கடை அதிபர் சாவில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வருமானவரி ஆலோசகர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை,
நெல்லையில் ஜவுளிக்கடை அதிபர் சாவில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வருமானவரி ஆலோசகர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை
நெல்லை மேலநத்தம் அருகே உள்ள எம்.எல்.எம்.நகரை சேர்ந்தவர் நவரத்தினம் (வயது 53). இவர் நெல்லை சந்திப்பில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் பெருமாள்புரத்தில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நவரத்தினத்தின் வீட்டில் இருந்து அவர் எழுதி வைத்து இருந்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், நெல்லையை சேர்ந்த வருமானவரி ஆலோசகர் ஒருவர் தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு நச்சரித்து வந்ததாக எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், வருமானவரி ஆலோசகரின் நச்சரிப்பால் தான் நவரத்தினம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
2 பேர் மீது வழக்கு
மேலும் நவரத்தினத்தின் மனைவி சுகுணா, பெருமாள்புரம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார். அந்த மனுவில், எனது கணவர் தற்கொலைக்கு ஒரு தனியார் நிதிநிறுவனத்தின் மேலாளரும், வருமானவரி ஆலோசகர் சுப்பிரமணியனும் தான் காரணம். எனது கணவர் கடந்த 20 நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்தார். நான் அவரிடம் கேட்டபோது, வருமானவரி ஆலோசகர் சுப்பிரமணியன், கமிஷன் தொகைக்காக ரூ.1½ கோடியை ஏமாற்றி விட்டார். எப்படியாவது அந்த பணத்தை திரும்ப வாங்க வேண்டும். அப்போதுதான் என்னால் வாழ முடியும் என்று கூறினார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். அப்படி இருந்தும் இறந்துவிட்டார். அவருடைய மன உளைச்சலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனு மீது பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, நவரத்தினத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வருமானவரி ஆலோசகர் சுப்பிரமணியன், தனியார் நிதிநிறுவன மேலாளர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story