ஸ்டெர்லைட் வழக்கின் தற்போதைய போக்குக்கு “அ.தி.மு.க. அரசுதான் காரணம்” வைகோ குற்றச்சாட்டு


ஸ்டெர்லைட் வழக்கின் தற்போதைய போக்குக்கு “அ.தி.மு.க. அரசுதான் காரணம்” வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Dec 2018 3:00 AM IST (Updated: 9 Dec 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று வைகோ குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று வைகோ குற்றம் சாட்டினார்.

ஸ்டெர்லைட் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான விசாரணையில், என்னை ஒரு தரப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தும் எனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 10-ந் தேதி நடக்க உள்ளது. அன்றைய விசாரணையில் நான் பேச அனுமதி கேட்பேன். அனுமதி தரவில்லை என்றால் அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வேன்.

கடந்த மே மாதம் 22-ந் தேதி மக்கள் திரண்டு வந்து போராட்டம் செய்து, ஒட்டுமொத்தமாக இந்த ஆலை வேண்டாம் என்று முடிவு எடுத்தனர். மக்கள் கோபத்துக்கு பயந்து தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆலையை மூடி உள்ளது.

அ.தி.மு.க. அரசுதான் காரணம்

ஸ்டெர்லைட் வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தான் காரணம்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை மூட தீர்ப்பு வரும் என்று தோணவில்லை. இதனால் போராட்டம் நிற்காது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும். ஆலை அகற்றப்படும் வரை போராட்டம் நடக்கும். ஆனால் வன்முறை இருக்காது. நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம்.

மேகதாது அணை

அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு துடிக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் தமிழகம் அழிந்து போகும். அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளில் எவ்வளவு தண்ணீர் தேக்கலாம், எவ்வளவு தண்ணீர் திறந்துவிடலாம் என்று அந்தந்த மாநிலமே முடிவு செய்யலாம் என்பது தான் அணை பாதுகாப்பு மசோதா ஆகும்.

தற்போது அந்த மசோதாவை மோடி அரசு கையில் எடுத்துள்ளது. அணை பாதுகாப்பு மசோதா வந்துவிட்டால் இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் தமிழகம் அழிந்து விடும். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் 5 கோடி மக்களுக்கு குடிநீர் இருக்காது. 25 லட்சம் பாசன நிலங்கள் அடியோடு அழிந்து போகும்.

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட்டார். ஆனால் தற்போது உள்ள அரசு அதை சரியாக செய்யவில்லை.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் வரும் சென்று சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் இந்த 20 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்று தி.மு.க. தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story