மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்


மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 6:50 PM GMT)

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம் அடைந்தார்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் 25-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் அதிக அளவில் சேதமடைந்து உள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2010-11-ம் ஆண்டு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல வீடுகள் சீரமைக்கப்பட்டன. தற்போது பெய்த மழையால் தொகுப்பு வீடுகளில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டின் மீது தார்ப்பாய்களை போர்த்தி, அந்த பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 45) என்பவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து சிமெண்டு காரைகள் சாந்தி மீது விழுந்தது.

இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், சோழம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவில் உள்ள அனைத்து தொகுப்பு வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதனால் மிகுந்த அச்சத்துடன்தான் வசித்து வருகிறோம். தினமும் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம். தொகுப்பு வீடுகளை சீரமைக்க போதிய வருவாய் இல்லாததால் சேதமடைந்த வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக பசுமை வீடுகள் திட்டத்தில் அரசே வீடுகளை கட்டிகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story