பாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


பாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 9:45 PM GMT (Updated: 8 Dec 2018 7:03 PM GMT)

பாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம், 

பாபநாசம் முண்டந்துறையில் புதிய பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

முண்டந்துறை பாலம்

பாபநாசத்துக்கு மேல் உள்ள பொதிகை மலையில் இருந்து தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது. அந்த பொதிகை மலை அருகே தான் பாபநாசம் அணை உள்ளது. இதன் அருகில் பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சேர்வலாறு அணை மற்றும் முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவையும் உள்ளன.

இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டுமானால் பாபநாசத்தில் இருந்து மலைப்பாதையில் செல்ல வேண்டும். இந்த மலைப்பாதையில் முண்டந்துறை என்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் 1938-ம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தின் வழியாகத்தான் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்று வந்தன.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

கடந்த 1992-ம் ஆண்டு பெய்த கனமழையால் பாபநாசம் அணையில் இருந்தும், காட்டுப்பகுதியில் இருந்தும் அதிகளவில் வெள்ளம் வந்தது. அப்போது முண்டந்துறை ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துக் கொடுத்தது. இந்த இரும்பு பாலத்தின் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மழை காலங்களில் இரும்பு பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடும். அப்போது போக்குவரத்து தடைபடும்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இதனால் அந்த இடத்தில் புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.5½ கோடியும், அதன் அருகில் சாலைகள் அமைக்க ரூ.1½ கோடியும் என மொத்தம் ரூ.7 கோடியில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து டெண்டர் விடப்பட்டு பாலம் கட்டும் பணி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

இதற்காக ஏற்கனவே சாலை இருந்த இடத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் தண்ணீரை ஒரு கரையோரமாக செல்லும் வகையில் திருப்பிவிட்டு பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்தது. முதலில் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. தற்போது கடந்த 6 மாத காலமாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story