நகர்வு கடைகளை இடமாற்ற நடவடிக்கை: ஊட்டி படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு


நகர்வு கடைகளை இடமாற்ற நடவடிக்கை: ஊட்டி படகு இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 7:09 PM GMT)

ஊட்டி படகு இல்லத்தில் நகர்வு கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஊட்டி,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் ஊட்டி படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. படகு இல்ல வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை அங்கு நிறுத்துகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு ஊட்டி படகு இல்லத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

படகு இல்ல வளாகத்தில் பொம்மைகள், பழங்கள், கம்பளி ஆடைகள் உள்ளிட்ட 48 நகர்வு கடைகளை வைத்து நடத்தும் 48 பேருக்கு சுற்றுலாத்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வளாகத்தில் வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதால், நகர்வு கடைகளுக்கு என்று கடந்த 2015–ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் தனித்தனியாக தளம் அமைக்கப்பட்டது. அந்த தளத்தில் இருபுறங்களிலும் கடைகள் என திட்டமிடப்பட்டு, அதன் நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த தளத்தில் நகர்வு கடைகளை வைக்குமாறு கூறியும், வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. இதனால் வாகனம் நிறுத்துமிடத்தில் நகர்வு கடைகளை வைத்திருக்கும் 48 பேருக்கு சுற்றுலாத்துறை மூலம் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், நகர்வு கடைகளுக்கு தனித்தளம் அமைக்கப்பட்டு உள்ளதால், அந்த இடத்தில் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடை அனுமதிக்கான அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 15 நாட்கள் ஆகியும் நகர்வு கடைகள் காலி செய்யப்பட வில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் ஊட்டி வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை படகு இல்ல வியாபாரிகள் சந்தித்து, நகர்வு கடைகளை வைத்து நடத்தும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு கலெக்டர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து நேற்று கலெக்டர் இன்னசென்ட், திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், கே.ஆர்.அர்ஜூணன், சாந்தி ராமு எம்.எல்.ஏ., ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் நாராயணன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் முரளி மற்றும் அதிகாரிகள் ஊட்டி படகு இல்லத்தில் நகர்வு கடைகள், தளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ள தளத்தில் சாய்வு தளம் அமைத்து, நகர்வு கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவும், வளாகத்தில் உள்ள மூன்று நுழைவுவாயிலில் ஒரு நுழைவுவாயிலை மூடவும், அப்பகுதியையொட்டி சில கடைகள் அமைக்கவும் திட்ட வரைப்படம் தயாரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதன்படி சிலருக்கு மட்டுமே நகர்வு கடைகள் ஒதுக்க முடியும் என்பதால், தளத்திலேயே கடைகளை அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வளாகத்தில் உள்ள குதிரை லாயத்தை சுத்தமாக வைக்கவும், உரிமம் பெற்ற குதிரைகளை மட்டும் நிறுத்தவும் அதிகாரிகள் முடிவு எடுத்து உள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் உள்ள கடைகளை முழுமையாக அகற்றி சுற்றுலா பயணிகள் எவ்வித தடையும் இன்றி சென்று வரும் வகையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


Next Story