காட்டெருமை புகுவதை தடுக்க தாவரவியல் பூங்காவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்
காட்டெருமை புகுவதை தடுக்க தாவரவியல் பூங்காவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. ஊட்டி நகரையொட்டி தொட்டபெட்டா, லவ்டேல், தீட்டுக்கல், கேர்ன்ஹில் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சுற்றுலா தலமான ஊட்டியில் வனப்பகுதியை ஒட்டி தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் எளிதில் வனவிலங்குகளை பார்க்கும் வகையில் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
சில தங்கும் விடுதிகளின் வளாகத்தில் வனவிலங்குகள் வந்து செல்லும் வகையில், அவற்றுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தங்கும் விடுதிகளில் இரவு நேரங்களில் அதிக சத்தத்தோடு பாடல் ஒலிக்கப்படுவதால் வனவிலங்குகள் வனப்பகுதிகளை விட்டு வெளியேறி ஊட்டிக்குள் வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊட்டி நகரின் மையப்பகுதியான காபிஹவுஸ் பகுதியில் குடியிருப்புகள் நடுவே காட்டெருமை ஒன்று உலா வந்தது. பின்னர் வனத்துறையினர் காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊட்டி–குன்னூர் சாலை, ஊட்டி–கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் காட்டெருமை உலா வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் சரிவர கட்டப்படாமல் இருந்தது. இதனால் பூங்காவுக்குள் அடிக்கடி காட்டெருமை ஒன்று புகுந்து, அங்குள்ள குளத்தில் தண்ணீர் குடித்து விட்டு சென்றது. சம்பவத்தன்று காட்டெருமை தடுப்பு வேலியை தாண்டி குதித்து, பூங்காவின் புல்வெளியல் உலா வந்தது. அப்போது பூங்காவை ரசித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் காட்டெருமையை பார்த்ததும் அலறியடித்து அங்கும், இங்கும் ஓட்டம் பிடித்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்குள் அடிக்கடி காட்டெருமை வந்து செல்வதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தோட்டக்கலைத்துறை மூலம் பூங்காவை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பூங்காவின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் போலீஸ் குடியிருப்பு செல்லும் சாலை, மலர் மாடத்தின் பின்பகுதி, நர்சரி செல்லும் சாலையோரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுச்சுவர் 10 அடி உயரத்துக்கு அமைக்கப்படுகிறது. அதன் மேல் கம்பி வலை போடப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.