பாளையங்கோட்டை புதிய பஸ்நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 100 கிலோ அல்வா பறிமுதல் செய்து அழிப்பு


பாளையங்கோட்டை புதிய பஸ்நிலைய கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 100 கிலோ அல்வா பறிமுதல் செய்து அழிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 9:30 PM GMT (Updated: 8 Dec 2018 7:26 PM GMT)

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 100 கிலோ அல்வாவை பறிமுதல் செய்து அழித்தனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 100 கிலோ அல்வாவை பறிமுதல் செய்து அழித்தனர்.

அதிகாரிகள் சோதனை

பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் அல்வா விற்பனை செய்யக்கூடிய மிட்டாய் கடைகள், பேக்கரி, டீக்கடைகள், ஓட்டல்கள், பழ ஜூஸ் கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமற்றதாகவும், சுகாதாரம் இல்லாமல் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் அங்குள்ள சுகாதார வளாகத்தில் உள்ள தண்ணீரை கொண்டுவந்து உணவு சமைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கலெக்டர் மற்றும் உணவுத்துறைக்கும் புகார்கள் வந்தன. மேலும் உணவுப்பொருட்களில் புழுக்கள் இருப்பதாகவும் ‘வாட்ஸ்-அப்’பில் தகவல்கள் பரவியது.

இதையடுத்து பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் நேற்று காலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன், முத்துகுமார், செல்லப்பாண்டி, கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

100 கிலோ அல்வா

இதில் கடைகளில் கூம்பு வடிவத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் அல்வாவில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவன லேபிள் ஒட்டப்படாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ அல்வாவை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதேபோல் கடைகளில் வடை, பஜ்ஜி, பனியாரம் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 ஆயிரம் வடைகள் மற்றும் பனியாரம், கேக் உள்ளிட்டவை 5 ஆயிரமும், காலாவதியான குளிர்பான பாட்டில்கள் 500-ம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த உணவுப்பொருட்கள் மீது பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ‘உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும்போது உணவு தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களின் விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறி உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ, சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டாலோ அதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு 94440 42322 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.

Next Story