நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி


நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2018 5:15 AM IST (Updated: 9 Dec 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்றக்கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பினால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும். சம்பந்தமே இல்லாதவர்களை கொண்டு வழக்கு தொடர்ந்தது முதல் தவறு.

மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை நேரடியாக நியமித்தபோது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்து அரசோ, முதல்-அமைச்சரோ வழக்கிற்கு சென்று இருக்கவேண்டும். அதை செய்யாமல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மற்றும் சம்பந்தம் இல்லாதவர்களை வைத்து வழக்கு தொடர்ந்ததால் அது முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. ஐகோர்ட்டு தீர்ப்பு வந்த பின்னராவது அரசு மேல்முறையீட்டுக்கு சென்றிருக்கவேண்டும்.

அந்த தீர்ப்பு வந்தபோது சபாநாயகர் ஐகோர்ட்டு தீர்ப்பு தன்னை கட்டுப்படுத்தாது என்று கூறி நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்துக்குள் விடவில்லை. அதே சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் வழக்கு தொடர்பான கருத்தை ஏற்று அவர்களை சட்டமன்றத்துக்குள் அனுமதித்தது திட்டமிட்ட நாடகம். மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து சதி செய்து புதுவைக்கு போராடி பெற்ற சுதந்திரத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த காலங்களில் நியமன எம்.எல்.ஏ.க்கள் மாநில அரசின் பரிந்துரையோடுதான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசு சரியாக சுப்ரீம் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.

ராஜ்யசபா எம்.பி., ஜனாதிபதி தேர்தலில்கூட வாக்களிக்கும் உரிமை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கிடையாது. அப்படி இருக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை எப்படி வரும்? எனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக சபாநாயகர் தெளிவான விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டில் கேட்டு பெறவேண்டும். 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story