வாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்


வாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:15 AM IST (Updated: 9 Dec 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், ரூ. 23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி,

புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கும்பல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதுபற்றி போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அந்த கும்பலை பிடிக்க புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுவை அண்ணா திடல் பின்புறம் சின்னசுப்புராயப்பிள்ளை வீதி, மாரியம்மன் கோவில் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 40), சந்துரு (29), உழவர்கரையைச் சேர்ந்த நடராஜன்(48), சாரத்தைச் சேர்ந்த பிரசாந்த் (25), ராஜ்குமார் (40) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 எண்கள் கொண்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரிகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் சோதனை நடத்தியபோது, 3 எண் லாட்டரி சீட்டுகள், 10 செல்போன்கள், ரூ.23 ஆயிரம் மற்றும் 4 டைரிகள், 2 கால்குலேட்டர் ஆகியவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவணனின் வீட்டில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதானவர்களில் சரவணன், சந்துரு ஆகிய 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story