‘கஜா’ புயல் பாதிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் முழுமையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
தமிழக மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் வினியோகம் சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை அங்குள்ள கிராம பகுதிகளில் 75 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கிராம பகுதிகளில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அங்கு உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அங்கு கூடுதல் பணியாளர்களை அனுப்பி உள்ளோம். அங்கும் கூடிய விரைவில் மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை இரண்டு, மூன்று நாட்களில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஒருவார காலத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுமூக உடன்பாடு ஏற்பட்ட பின், அந்த பணிகள் தொடங்கப் படும்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை மின் மிகை மாநிலமாக உருவாக்கி தந்து உள்ளார். தற்போது புதிய மின் திட்டங்கள் நடைபெற்று வருவதால், இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின் உற்பத்தி உயரும். புதிய மின்பாதை அமைக்கப் பட்டால் தான் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை முழுமையாக வழங்க முடியும். இதனால் எதிர்காலத்தில் புதிய மின்பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
மின் வாரியத்தில் உதவிப்பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி கொடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திடம் கோரி உள்ளோம். இந்த மாதத்திற்குள் நடத்திக்கொடுப்பதாக தெரிவித்து உள்ளனர். மேலும் 2 ஆயிரம் உதவியாளர்களை தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ‘கஜா’ புயலால் தாமதமாகி வருகிறது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு அது குறித்து மின்வாரியம் முறையாக அறிவிக்கும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து உங்களுடைய ரகசிய ஆடியோ ஒன்றை டி.டி.வி. தினகரன் தரப்பினர் வெளியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, ‘தாராளமாக வெளியிடட்டும். எனக்கு மடியில் கனம் இல்லை. அவர்கள் வெளியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் குறித்த ஆடியோ விவகாரத்திலும் ஒன்றுமில்லை. ஆடியோ வெளியிடுவோம் என்ற பெயரில் தினகரன் தரப்பினர் ஒவ்வொருவரையும் ‘பிளாக் மெயில்’ செய்து வருகின்றனர்’ என்றார்.
Related Tags :
Next Story