கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது கண்டிக்கதக்கது - ராமகிருஷ்ணன் பேட்டி


கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது கண்டிக்கதக்கது - ராமகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 8:11 PM GMT)

கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

சிவகங்கை,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாடு சிறப்பு கருத்தரங்கம் சிவகங்கையில் வரவேற்பு குழு தலைவர் வக்கீல் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைகுழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் சின்னதுரை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் தென்னரசு, பொருளாளர் ஜேம்ஸ்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆலையை மூட தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய அரசின் பொருளாதார கொள்கை நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் தமிழகத்தில் 50 ஆயிரம் தொழில்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 5 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டனர்.

கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ள போது, அயோத்தியில் சங்பரிவார் அமைப்புகள் ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியதை மத்திய அரசு இதுவரை மறுக்கவில்லை. இது பா.ஜ.க. மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது.

இதுபோல் தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக மாநில அரசு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.357 கோடி தான் தந்துள்ளது. இதுபோல் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். பல்கலைக்கழகங்களில் ஊழல் மலிந்து வருகிறது. அரசு நிர்வாகத்திலும் ஊழல் அதிகரித்துள்ளது. புயல்பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

ரே‌ஷன் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. கொண்டு வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இது மிகக்கொடுமையானது. கேரளாவில் சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதில், பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஏமாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்


Next Story