நாமக்கல்லில் 2,854 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்


நாமக்கல்லில் 2,854 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 8:33 PM GMT)

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 2,854 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல்,

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி உஷா வரவேற்று பேசினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினர்.

இந்த விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:- அரசு பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து வருகிறது. குறிப்பாக கடந்த காலங்களில் காக்கி நிறத்தில் இருந்த சீருடையும் தற்போது மாற்றப்பட்டு விட்டது.

உங்கள் பெற்றோர் உங்களை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். அதை உணர்ந்து நன்கு படிக்க வேண்டும். கல்வி செல்வம் ஒன்றுதான் இந்த உலகில் அழியாத செல்வம் ஆகும். அது தான் வாழ்க்கையில் முன்னேற உதவும்.

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு புதுச்சத்திரம் மற்றும் எர்ணாபுரம் ஆகிய இரு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன. இனிவரும் காலங்களில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சியை பெற வேண்டும். மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லி தரும் பாடத்தை வீட்டிற்கு சென்று படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். நீங்கள் ஆசிரியர்களுக்காக இல்லை என்றாலும் உங்களின் எதிர் காலத்தை மனதில் வைத்தும், பெற்றோருக்காகவும் நன்றாக படித்து தேர்ச்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 2,854 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் தலைவர்கள் மற்றும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன் நன்றி கூறினார்.

Next Story