336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்


336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:30 AM IST (Updated: 9 Dec 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

336 ஏக்கர் பரப்பளவில் கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடி செலவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

பெங்களூரு, 

336 ஏக்கர் பரப்பளவில் கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடி செலவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ஆய்வு

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் கே.ஆர்.எஸ். அணையில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் கர்நாடக அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா (டிஸ்னிலேண்ட்) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் மந்திரிகள் டி.சி.தம்மண்ணா, சா.ரா.மகேஷ், புட்டராஜூ மற்றும் யதீந்திரா எம்.எல்.ஏ., நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் பார்வையிட்டனர். பின்னர் பொழுதுபோக்கு பூங்காவை எங்கு அமைக்கலாம் என்று வரைபடத்தை பார்த்து ஆய்வு செய்தனர். அவர்கள் கே.ஆர்.எஸ். அணைப்பகுதியை சுற்றி சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்தனர்.

ஆலோசனை கூட்டம்

பின்னர் அங்கு டி.கே.சிவக்குமார் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.ஆர்.எஸ். அணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது, காவிரித்தாய், கிருஷ்ணராஜ உடையார் ஆகியோரின் சிலைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பொழுதுபோக்கு பூங்கா, சிலைகள் அமைப்பதற்கு அங்கு போதுமான நிலங்கள் உள்ளதா? அல்லது எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும்? என்பன உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

336 ஏக்கர் பரப்பளவில்...

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த பின்னர், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நீர்ப்பாசனத்துறைக்கு 2 முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. அதில் ஒன்று மேகதாது பகுதியில் அணைக்கட்டுவது, மற்றொன்று கே.ஆர்.எஸ். அணைப்பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது. கே.ஆர்.எஸ். அணையில் அமைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்கா புது உலகத்துக்குள் கொண்டு செல்லும் வகையில் இருக்கும். இந்த திட்டத்துக்காக தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை உள்பட மொத்தம் 336 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும்.

இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதன் மூலம் கே.ஆர்.எஸ். அணைப்பகுதிக்கு தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பொழுதுபோக்கு பூங்கா அருகே பாரம்பரிய வீதி அமைக்கப்படும். கர்நாடகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்த வீதி அமைந்திருக்கும்.

எந்த பாதிப்பும் இருக்காது

கே.ஆர்.எஸ். முன்பு இருக்கும் பிருந்தாவன் பூங்கா பழைய தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது. தற்போது பிருந்தாவன் பூங்கா புதிய தொழில்நுட்பத்தில மேம்படுத்தப்படும். அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ரக மலர் செடிகள், நீர் விளையாட்டுகள் அமைக்கப்படும். கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசிப்பதற்காக அங்கு ‘வியூவிங் டவர்’ அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவை பார்த்து ரசிக்கலாம். இந்த ‘வியூவிங் டவர்’ காவிரித்தாய் சிலை வடிவத்திலும் இருக்கலாம், கிருஷ்ணராஜ உடையார் சிலை வடிவத்திலும் இருக்கலாம்.

பொழுதுபோக்கு பூங்கா, காவிரித்தாய் மற்றும் கிருஷ்ணராஜ உடையார் சிலைகள் அமைப்பதால் கே.ஆர்.எஸ். அணைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையின் பாதுகாப்புக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம். இந்த திட்டம் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அமைக்கப்படும்.

ரூ.1,500 கோடி செலவில்...

இந்த திட்டத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும். டெண்டர் பணி முடிந்தவுடன் 2½ ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கான பணிகள் முழுமையாக முடிவடைந்துவிடும். இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு ரூபாய் கூட அரசின் பணம் கிடையாது. இந்த திட்டம் முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் தான் நடக்கும். அடுத்த 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும். இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் அரசுக்கு வருவாய் பெருகும்.

கே.ஆர்.எஸ். அணையை சுற்றியுள்ள மக்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களின் பொருளாதார நிலை உயரும். இந்த திட்டத்தை ரெயில்வே, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, விமானத்துறை ஆகிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மைகளை கூறி அவர்களை சமாதானப்படுத்துவோம். இதுபற்றி ஆலோசனைகள் கேட்பதற்கும், இந்த திட்டம் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தனி கமிட்டி அமைக்கப்படும்.

கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா வந்த பிறகு, குடகு, பந்திப்பூர், ரங்கனத்திட்டு, மைசூரு, கே.ஆர்.எஸ். ஆகிய பகுதிகளை இணைத்து மாநில அரசு சார்பில் பேக்கேஜ் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story