மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் தம்ளர் பயன்படுத்த தடை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது


மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் தம்ளர் பயன்படுத்த தடை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 8 Dec 2018 10:15 PM GMT (Updated: 8 Dec 2018 9:22 PM GMT)

சேலம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் தம்ளர் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் மளிகை கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வருகிற புத்தாண்டு தினம் முதல், டாஸ்மாக் பார்களிலும் பிளாஸ்டிக் தம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அனைத்து டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கும் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது குறித்து பார் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம், கலால் உதவி ஆணையர் ரவிச்சந்தின் உள்பட சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வருகிற 1-ந் தேதி முதல் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதால், டாஸ்மாக் பார்களில் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் தம்ளர் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அதை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, தமிழக அரசின் நடவடிக்கைக்கு பார் உரிமையாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர். இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 201 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 54 கடைகளுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பார்களில் பிளாஸ்டிக் தம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது. அதற்கு பதில் சில்வர் அல்லது கண்ணாடி தம்ளர் பயன்படுத்தலாம். தண்ணீர் பாக்கெட்டுக்கு பதில் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யலாம்.

அரசு விதிமுறைகளை மீறி தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் தம்ளர் பயன்படுத்துவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு பார் உரிமம் ரத்து செய்யப்படும். இருப்பினும் டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று மாவட்டம் முழுவதும் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story