சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த அதிகாரியிடம் சாட்டிலைட் செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 9:38 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் நிறுவன அதிகாரியிடம் இருந்து சாட்டிலைட் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழிற்படையினர் சோதனை செய்தனர்.

அதில் பயணம் செய்ய ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிட்சர் ஜோசென்(வயது 45) என்பவர் வந்திருந்தார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது, அவரது பையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் செல்போன் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பிரபல கார் நிறுவன அதிகாரி

இதனை தொடர்ந்து அவரது பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் பிட்சர் ஜோசென் பிரபல கார் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருவதும் சென்னையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 6-ந் தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததும் தெரியவந்தது.

மீண்டும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் வழியாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்ல இருந்ததும் என தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் பிட்சர் ஜோசெனை ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த சாட்டிலைட் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

பிட்சர் ஜோசென் கடந்த 6-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது அவரிடம் சாட்டிலைட் செல்போன் இருந்தது. ஆனால் அப்போதே அவர் செல்போன் வைத்திருந்தது ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? என்பது தெரியவில்லை. அவரிடம் முறையாக சோதனை நடத்தப்பட்டதா? என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து கார் நிறுவன அதிகாரியிடம் விமான நிலைய போலீசார், கியூபிராஞ்ச், உளவுத்துறை மற்றும் மத்திய தொழிற்படையினர் கூட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பின் பிட்சர் ஜோசென்னிடம், எழுதி வாங்கி கொண்டு மீண்டும் அவர் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story