மாயமான வைர வியாபாரி பிணமாக மீட்பு மந்திரி உதவியாளர் உள்பட 3 பேர் கைது


மாயமான வைர வியாபாரி பிணமாக மீட்பு மந்திரி உதவியாளர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 10:18 PM GMT)

மாயமான வைர வியாபாரி பன்வெல் அருகே அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

மும்பை, 

மாயமான வைர வியாபாரி பன்வெல் அருகே அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் மந்திரி பிரகாஷ் மேத்தாவின் உதவியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைர வியாபாரி

மும்பை காட்கோபர் பந்த் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வர். வைர வியாபாரியான இவர் விக்ரோலியில் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். கடந்த மாதம் 28-ந் தேதி அலுவலகத்தில் இருந்து சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். இந்த புகார் தொடர்பாக பந்த் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை அழைத்து சென்ற கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், பந்த் நகர் மார்க்கெட் பகுதியில் சென்றபோது வைர வியாபாரிக்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. பின்னர் அவர் அங்கு வந்த மற்றொரு காரில் ஏறி சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

பிணமாக மீட்பு

இதற்கிடையே பன்வெல் அருகே அணைக்கட்டு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், பயங்கர ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பிணமாக மீட்கப்பட்டவர் மாயமான வைர வியாபாரி ராஜேஸ்வர் என்பது தெரியவந்தது.

வைர வியாபாரி அணிந்திருந்த நகைகள், செல்போன் காணாமல் போய் இருந்தது.

3 பேர் கைது

இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த பந்த் நகர் போலீசார் வைர வியாபாரியின் செல்போன் நம்பரை கொண்டு விசாரணை நடத்தினர். இதில், அவருக்கு நிறைய பெண்களிடம் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் குறிப்பிட்ட 20 பெண்கள் உள்ளிட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வைர வியாபாரி கொலையில், மந்திரி பிரகாஷ் மேத்தாவின் உதவியாளர் சச்சின் பவார் மற்றும் 2 பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சச்சின் பவார் மற்றும் 2 பெண்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story