வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5,349 வழக்குகளுக்கு தீர்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்து 349 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
வேலூர்,
தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆனந்தி தலைமை தாங்கினார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வெற்றிச்செல்வி, மகிளா நீதிபதி செல்வம், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த 4 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.44 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி வழங்கி பேசியதாவது:-
வேலூர் கோர்ட்டில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் 130 நிலுவை வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன. வேலூரில் இதுவரை ரூ.7 கோடியே 18 லட்சத்து 18 ஆயிரத்து 571 பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இலவச சட்ட உதவி மையம் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணநிதி மற்றும் போர்வை, ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஓய்வு பெற்ற சார்பு நீதிபதி லட்சுமி ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கி உள்ளார். இவை அனைத்தும் கலெக்டரிடம் சில தினங்களில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நிலமோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பாரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அருண்குமார், குற்றவியல் மாஜிஸ்திரேட்டுகள் அலிசீயா, வெற்றிமணி, கனகராஜ், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சதீஷ்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 12 ஆயிரத்து 729 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதில், 5 ஆயிரத்து 349 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மூலம் ரூ.17 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 570 இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story