ஓடும் ரெயிலில் கழுத்தை அறுத்து பெண் கொலை நகை, பொருட்கள் கொள்ளை
ஓடும் ரெயிலில் கழுத்தை அறுத்து பெண்ணை கொலை செய்து நகை, பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
ஓடும் ரெயிலில் கழுத்தை அறுத்து பெண்ணை கொலை செய்து நகை, பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ரெயிலில் பெண் பிணம்
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் இருந்து மும்பை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நேற்று அதிகாலை 12.10 மணியளவில் தாதர் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. இந்த ரெயிலில் இருந்த பயணிகள் இறங்கி சென்ற பிறகு ரெயில்வே போலீசார் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது மகளிர் பெட்டியில் பெண் ஒருவர் படுக்கை நிலையில் இருந்தார். உடலில் போர்வை போர்த்தப்பட்டு இருந்ததால் அவர் தூங்கி கொண்டு இருப்பதாக போலீசார் கருதினர். அந்த பெண்ணை சத்தம் போட்டு எழுப்பினர். ஆனால் அவர் அசைவின்றி கிடந்தார்.
எனவே போலீசார் போர்வையை விலக்கி பார்த்தனர். அப்போது அவர் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
நகைகள் மாயம்
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான பெண் சூரத்தை சேர்ந்த தேரியா தேவி (வயது40) என்பதும், மும்பை வடலாவில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.
பெண்ணின் செல்போன் உள்ளிட்ட உடைமைகள், கழுத்தில் அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. எனவே கொள்ளை கும்பல் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் ரெயில்நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தேரியா தேவிக்கு கணவர் மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் மும்பையில் போரிவிலி-தாதர் இடையே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த பயங்கர சம்பவம் ரெயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story