சிம்னி விளக்கு சரிந்ததால் குடிசை எரிந்து முதியவர் உயிரோடு கருகி சாவு
சிம்னி விளக்கு சரிந்ததில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் முதியவர் கருகி பலியானார்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே உள்ள பழைய ஓச்சலம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 71), தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (65). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள், மகள் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
ஆறுமுகமும் அவரது மனைவி வள்ளியம்மாளும் அதே பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வள்ளியம்மாள் அருகே உள்ள வீட்டிற்கு தூங்க சென்று விட்டார். ஆறுமுகம் மட்டும் வீட்டில் தனியாக தூங்கியுள்ளார். அப்போது அவர் வெளிச்சத்திற்காக சிம்னி விளக்கை எரிய விட்டிருந்தார்.
நள்ளிரவில் எழுந்த ஆறுமுகம் தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் படுத்தார். அப்போது வீட்டில் எரிந்து கொண்டிருந்த சிம்னி விளக்கு மீது கால் பட்டுள்ளது. இதனால் சிம்னி விளக்கு கீழே சரிந்து உருண்டது. அதில் எரிந்து கொண்டிருந்த தீ குடிசையில் படவே குடிசை வீடு எரிந்தது. இதில் ஆறுமுகம் உயிரோடு தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சபாபதி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story