வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு


வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் - கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2018 3:30 AM IST (Updated: 9 Dec 2018 11:15 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 20-ந் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லாத மாவட்டமாக உருவாக்குவது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு புதியதாக பிளாஸ்டிக் பொருட்கள் கொள்முதல் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தகுந்த ஆவணங்களை சமர்பித்து அதனையும் நவம்பர் 25-ந் தேதிக்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருந்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்படும்.

அனைத்து நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கடைகள், உழவர் சந்தை, சிறு வியாபார வணிக வளாகங்கள், நடைபாதையோர காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்து உடனடியாக அந்த இடத்திலேயே பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ரேஷன் கடைகள், டாஸ்மாக் கடைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தவில்லை என்பதற்கான விளம்பர பலகை வைக்கப்பட வேண்டும்.

வருகிற 20-ந்தேதிக்கு(வியாழக்கிழமை) பிறகு எந்தவொரு நிறுவனமோ, அரசு அலுவலகங்களிலோ, வீடுகளிலோ மற்றும் பொதுமக்களோ ஒருமுறை பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, பயன்படுத்தப்பட்ட பொருளும் பறிமுதல் செய்யப்படும். குறிப்பாக அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களுடைய வாகனத்தில் துணிப்பைகளை வைத்திருக்க வேண்டும். அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எனவே அனைத்துத்துறை அதிகாரிகளும் துரித நடவடிக்கை மேற்கொண்டு விழுப்புரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்படுத்தாத மாவட்டமாக உருவாக்கிட தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மஞ்சுளா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story