மரக்காணம் அருகே ; கடலில் குளித்த பள்ளி மாணவர் உள்பட 2 பேரை அலை இழுத்துச் சென்றது - தேடும் பணி தீவிரம்


மரக்காணம் அருகே ; கடலில் குளித்த பள்ளி மாணவர் உள்பட 2 பேரை அலை இழுத்துச் சென்றது - தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Dec 2018 4:15 AM IST (Updated: 9 Dec 2018 11:35 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவர் உள்பட 2 பேரை ராட்சத கடல் அலை இழுத்துச் சென்றது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மரக்காணம்,

மரக்காணம் அருகே சிங்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் சாதிக். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபு (வயது 14). திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஜாவித் (18) தனியார் பள்ளி வேனில் கிளினராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை அபு, ஜாவித் மற்றும் அவர்களின் நண்பர்களான இப்ரான் (18), அமீன் (18), யூசுப் அலி (23), அசைன் பாஷா (23) ஆகியோர் மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடற்கரைக்கு சென்றனர். அப்போது அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் அபு, ஜாவித் ஆகியோர் சிக்கினர். அவர்கள் இருவரையும் அலை வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றுவிட்டது. அதை பார்த்த அவர்களது நண்பர்கள் அவர்கள் இருவரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து உடனடியாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து படகுகளில் சென்று கடலில் மூழ்கிய அபு மற்றும் ஜாவித்தை தேடினர். ஆனால் அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனையடுத்து கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் விரைந்து வந்து அப்பகுதி மீனவர்களுடன் இணைந்து அபு மற்றும் ஜாவித்தை தேடிப்பார்த் தனர். நீண்ட நேரம் தேடியும் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே இரவு நேரம் வந்ததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று (திங்கட்கிழமை) காலை தேடும் பணியை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேரை கடல் அலை இழுத்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story