திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி


திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி
x
தினத்தந்தி 10 Dec 2018 4:00 AM IST (Updated: 10 Dec 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி குப்த கங்கையில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாஞ்சியம் கிராமம் உள்ளது. இங்கு உள்ள வாஞ்சிநாதர் கோவிலில் எமதர்மன் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு வாகனத்தில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் கோவிலில் உள்ள குப்தகங்கை தீர்த்த குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று கார்த்திகை கடைசி ஞாயிறையொட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் முருகன், வள்ளி- தெய்வானையுடன் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் குப்த கங்கையில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அதன் பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

அப்போது திரளான பக்தர்கள் முருகா, முருகா என கோஷம் எழுப்பியபடி குப்தகங்கையில் புனித நீராடினர். அமைச்சர் ஆர்.காமராஜ், அவருடைய மனைவி லதாமகேஸ்வரி ஆகியோரும் குப்தகங்கையில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

உற்சவத்தையொட்டி நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அதேபோல தீர்த்த குளத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story