தாம்பரம் சானடோரியத்தில் மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரசீர்கேடு
தாம்பரம் சானடோரியத்தில் அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் பகுதியில் அரசு தேசிய சித்த மருத்துவமனை உள்ளது. முக்கியமான நோய்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், சென்னை, தாம்பரம் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பலர் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
ஜி.எஸ்.டி. சாலையோரத்தில் உள்ள இந்த மருத்துவமனையின் அருகில், குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் தனியார் பஸ்கள், வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடுடன் காணப்படும் இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அந்த வழியாக செல்வோர் அதனை சிறுநீர் கழிக்கும் இடமாக பயன்படுத்துகிறார்கள். இதன்காரணமாக இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மூக்கை மூடி கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
முக்கிய மருத்துவமனைகள், கோவில்கள் உள்ள இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடம் சிட்லபாக்கம் பேரூராட்சி எல்லையில் உள்ளது. எனவே பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு சுகாதாரசீர்கேடு ஏற்படுத்தும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.