திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 9 Dec 2018 7:06 PM GMT)

சாமல்பட்டியில் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஊத்தங்கரை,

ராயக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (வயது 22). இவருக்கும் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 மாதத்தில் நித்தீஷ்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது பிரியங்காவிற்கு 25 பவுனும், மாப்பிள்ளைக்கு 5 பவுனும் பெண் வீட்டார் போட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குழந்தைக்கு 5 பவுன் நகை போடுமாறு மாப்பிள்ளை வீட்டில் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக பிரியங்கா அவரது தாய் லட்சுமிக்கு போனில் தெரிவித்தார். இதையடுத்து பெண்ணின் தாய், தந்தை ராணுவத்தில் இருந்து வந்த பிறகு நகையை கொடுப்பதாக கூறினார். இதனால் பிரியங்காவை அவரது கணவர் வீட்டார் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரியங்கா சாமல்பட்டியில் உள்ள தனது கணவர் வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் ஆகி 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன் மற்றும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story