கம்பம் பழைய பஸ்நிலைய பகுதியில்: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள்


கம்பம் பழைய பஸ்நிலைய பகுதியில்: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள்
x
தினத்தந்தி 10 Dec 2018 3:30 AM IST (Updated: 10 Dec 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பழைய பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கம்பம், 

கம்பம் சுற்று பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. ஆடை உற்பத்தி சார்ந்த தொழிலும் இருப்பதால் கம்பம் நகர் பகுதியை ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காபி, ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்காக தொழிலாளர்களை அழைத்து செல்லும் ஆயிரக்கணக்கான ஜீப்கள் கம்பம் வழியாகவே செல்கின்றன. இந்நிலையில் நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

எனவே சாலைகளின் அளவு குறுகியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்க தேனியில் இருந்து கம்பம் புதிய பஸ்நிலையத்திற்கு வரக்கூடிய பஸ்களும், குமுளியில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள் ஏ.கே.ஜி.திடல், அமராவதி தியேட்டர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் குமுளி, தேனி செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் மாரியம்மன் கோவில், பழைய பஸ்நிலைய சிக்னல் வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் ஆட்டோக்கள், தனியார் பஸ்கள் வெகுநேரம் நிறுத்தி ஆட்களை ஏற்றி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து போக்குவரத்து சிக்னலில் இருந்து பழைய பஸ்நிலையம் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்கள் தென்புறத்திலும், ஆட்டோ உள்பட அனைத்து வாகனங்களும் வடபுறத்திலும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களும் ,வணிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story