காரிமங்கலம் அருகே கார் கவிழ்ந்து ஆசிரியை உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்
காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் பள்ளி ஆசிரியை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். உடன் வந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரிமங்கலம்,
சேலம் மாவட்டம் ஆத்்தூர் தாலுகா சிவகுரு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). விவசாயி. இவரது மகன் திருமாளன் (16). பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை அடுத்த ஒஸ்கூர் பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் பழனிசாமி காரில் தனது மகனை பார்க்க பெங்களூருவுக்கு சென்றார். காரை ராசிபுரம் அடுத்த கோணேரிப்பட்டியை சேர்ந்த பாலகுமார் (34) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த காரில் பழனிசாமியின் நண்பரான ஆத்தூர் தாலுகா வடலூரை சேர்ந்த அல்லிமுத்து (48) என்பவர் அதே பள்ளியில் படித்து வரும் தனது மகனை பார்க்க உறவினர்களான ராஜாமணி (70) பவளக்கொடி (40) மற்றும் பாலகுமாரின் மனைவி தனியார் பள்ளி ஆசிரியை திவ்யா (28) ஆகியோரும் சென்றனர். பின்னர் பழனிசாமி தனது மகன் உள்ளிட்டவர்களுடன் நேற்று மதியம் ஆத்தூருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது காரின் முன்பக்க சக்கரம் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவரில் மோதி எதிர் திசை சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் ராஜாமணி, அல்லிமுத்து, திருமாளன், பவளக்கொடி, பாலகுமார், இவருடைய மனைவி திவ்யா ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆசிரியை திவ்யா பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story