டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.16½ லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.16½ லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Dec 2018 3:45 AM IST (Updated: 10 Dec 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.16½ லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி கிழக்கு கடற்கரை சாலை அருகே தோப்புவயல் கிராமம் உள்ளது. இங்கு தென்னை மரங்கள் நிறைந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக ஆ.குடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 42), காளிதாஸ் (34), செந்தில்குமார் (37) ஆகிய 3 பேரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கடையை பூட்டி விட்டு, விற்பனையான ரூ. 16 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு காளிதாசும், கண்ணனும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

ஊழியருக்கு அரிவாள் வெட்டு

மோட்டார் சைக்கிளை கண்ணன் ஓட்ட, அவருக்கு பின்னால் காளிதாஸ் பணப்பையுடன் உட்கார்ந்து சென்றார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். அப்போது இருட்டில் மறைந்து இருந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென்று காளிதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னால் இருந்த காளிதாசின் காலில் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது காளிதாஸ் வைத்திருந்த ரூ.16½ லட்சம் பணப்பையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காளிதாசை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடை ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.16½ லட்சத்தை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story