மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு மண்வள அட்டை; வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு மண்வள அட்டை; வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2018 3:30 AM IST (Updated: 10 Dec 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்படுகிறது என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

மாவட்ட வேளாண்மை இயக்குனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மகசூலை அதிகரிக்க எந்த வகையான சத்துக்களை மண்ணில் இடவேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் அறிந்து கொள்ள வசதியாக வேளாண்மைத்துறை சார்பில் அனைத்து நிலங்களிலும் மண்மாதிரி சேகரிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கப்படுகிறது.

அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம வரை படங்களை மையமாக வைத்து கிரிட் முறைப்படி மண் மாதிரிகள் சேகரித்து பிரச்சினை உள்ள மண் கண்டறியப்பட்டு அதனை சீர்செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதில் ஒவ்வொரு 2½ எக்டேருக்கும் மண்மாதிரி எடுக்கப்படுகிறது. மண் மாதிரிகள் எடுக்கப்படும் கிரிட்டின் மையப்பகுதியில் செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜி.பி.எஸ். கருவி கொண்டு அந்த இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை பதிவு செய்யப்படுகிறது. இதைக்கொண்டு மண் மாதிரிகள் விவசாயிகளின் நிலங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது.

பயிற்சி பெற்ற மண் ஆய்வக வேளாண்மை அலுவலர்களால் மண்ணின் உப்புத்தன்மை, கலர் அமிலநிலை, நுண்ணூட்டம் மற்றும் முதல்நிலை, இரண்டாம் நிலை சத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் பயிர்வாரியாக அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை மூலம் தெரியப்படுத்தப்படும்.

பயிர்களுக்கு தேவையான உரத்தை மட்டுமே மண்ணில் இடுவதன் மூலம் உரங்களின் அளவு குறைவதோடு, உரத்திற்கான செலவும் குறைக்கப்பட்டு, மண் வளம் பாதுகாக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Next Story