ஆசிரியர்கள் உயர் கல்வி பயில முன் அனுமதி; வட்டார கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தல்


ஆசிரியர்கள் உயர் கல்வி பயில முன் அனுமதி; வட்டார கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Dec 2018 10:15 PM GMT (Updated: 2018-12-10T01:10:09+05:30)

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஆசிரியர்கள் தங்களது கல்வி தரத்தை உயர்த்த அஞ்சல் வழியில் உயர்கல்வி பயில துறை முன்அனுமதி பெற வேண்டும். இதில் ஏற்கனவே உயர்கல்வி பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் இருந்தது. இதில் பல்வேறு நிர்வாக சிக்கல் ஏற்பட்டதால், சில ஆண்டுகளுக்கு முன்பு வட்டார கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என கல்வித்துறை மாற்றி உத்தரவிட்டது.

ஆனால் தற்போது ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனால் சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் உயர்கல்விக்கான முன் அனுமதி பெறும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலகமும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றி தேவையற்ற காரணங்களை கூறி ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பங்களை திருப்பி விடுகின்றன. இதனால் தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் உயர் கல்வியை தொடர்வதில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஏற்கனவே வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை, சிறப்பு நிலை, முன் அனுமதி வழங்கும் அதிகாரங்களை திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story