சிங்கிரிகுடியில்: 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடு - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்


சிங்கிரிகுடியில்: 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடு - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-10T01:24:50+05:30)

சிங்கிரிகுடியில் 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த சிங்கிரிகுடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா கறவை மாடு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமை தாங்கினார். மண்டல இணை இயக்குனர் சுமதி வரவேற்றார். விழாவில் அமைச்சர்

எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 50 பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு விலையில்லா கறவை மாடு, ஆடு, கோழி வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். விவசாய சாகுபடிக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் விவசாயிகள், பெண்கள் அதிக அளவில் கவனம் செலுத்தும் காரணத்தால் திட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டத்திற்காக ரூ.240 கோடியை ஒதுக்கியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் இதுவரையில் 6 ஆயிரம் கறவை மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாடுகள் கொண்டு செல்வதற்கான பயணப்படி மற்றும் மாடுகளுக்கான காப்பீடு தொகை, மாடு உரிமையாளர்களுக்கு இதர செலவு தொகையும் வழங்கப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரையில் மாடு பெற்றவர்கள் தற்போது ஒரு மாட்டு பண்ணையை உருவாக்கியுள்ளனர். அதேபோல் இந்த கிராமத்தில் இருப்பவர்களும் தற்போது பெறப்பட்ட மாடுகளை இந்த மாதிரி சரியாக பராமரித்து, மாட்டுப் பண்ணையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, கால்நடை மருத்துவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி இயக்குனர் டாக்டர் ராகவன் நன்றி கூறினார்.

Next Story