நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.82 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
நாமக்கல்,
நாமக்கல்லில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் உடல் அளவில் மட்டுமே மாற்றுத் திறனாளிகள். ஆனால் அவர்கள் உள்ளத்தினால் வெற்றி பெறும் திறன்மிக்கவர்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் சாதனைபுரியும் அளவிற்கு திறமையானவர்கள். வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை இக்கூட்டத்தில் மனுவாக வழங்குவதன் மூலம் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் அரசினால் வழங்கப்படும்.
மேலும் வேலைக்கு செல்ல விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளும், சுயதொழில் புரிய விரும்புகிறவர்களுக்கு வங்கி கடன் உதவிகளும், மானியமும் அரசினால் வழங்கப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேறி சாதனைபுரிய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
இதேபோல் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா பேசும்போது, கடந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசினால் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக ரூ.2 ஆயிரத்து 509 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மருத்துவ முகாம் நடத்திய மருத்துவமனைகளுக்கு நினைவு பரிசுகளையும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.
தொடர்ந்து விழாவில் 1,014 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 82 லட்சத்து 78 ஆயிரத்து 490 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இதில் நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், அரசு வக்கீல் தனசேகரன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story