சேலத்தில், கோவில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு
சேலத்தில் கோவில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஆனது.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமித்து 4 கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் புகார் கொடுத்தார்.
இந்தநிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது கடைகள் வைத்திருப்போர், கடைகளை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சூரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கடைக்காரர்கள் அங்கு வந்த அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள் நீண்ட காலமாக கடைகள் வைத்து நடத்தி வருகிறோம். இந்த இடத்திற்கான ஆவணங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். இது எங்களுக்கு சொந்தமான இடம் தான். அரசுக்கு சொந்தமான இடம் இல்லை. எனவே கடைகளை அகற்றக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட அவர்கள், இந்த இடம் கோவிலுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் இடம். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. எனவே கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள கடைகளை அகற்றுவோம், என்றனர். இதையடுத்து அதிகாரிகள் கடைகளை அகற்றுவதற்கு தயாராகினர். ஆனால் கடைக்காரர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மதியம் 2 மணியளவில் மீண்டும் பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் வந்து 4 ஆக்கிரமிப்பு கடைகளையும் இடித்து அகற்றினர்.
பின்னர் இந்த இடத்தில் வேறு யாரும் இனிமேல் ஆக்கிரப்பு செய்யாமல் இருக்கும் வகையில் வேலி அமைக்கப்பட்டது. இதேபோல் தொடர்ந்து கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story