22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் தினேஷ் குண்டுராவ் திட்டவட்டம்
வருகிற 22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது உறுதி என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
வருகிற 22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது உறுதி என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் உறுதி
மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் வருகிற 22-ந் தேதி மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, வருகிற 22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது உறுதி. மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்துள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணம் நிறைவேற்றப்படும். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் பெலகாவியில் நடைபெறும் முதல்வார கூட்டத்தொடரில் அவர் கலந்து கொள்ள மாட்டார். 2-வது வாரம் நடைபெறும் கூட்டத்தொடரில் சித்தராமையா கலந்து கொள்வார். வருகிற 18-ந் தேதி பெலகாவியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
உண்மைக்கு புறம்பானது
சித்தராமையாவின் ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். அது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் பா.ஜனதாவினா் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜனதாவினர் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் கலந்து கொள்வார்கள்.
கூட்டத்தொடரில் பங்கேற்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தயங்குவதாக கூறுவது தவறானது. நாங்கள் எதற்காக பயப்பட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்ேதர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. கூட்டணி ஆட்சி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே இடைத்தேர்தல் வெற்றியின் பிரதிபலிப்பாகும்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Related Tags :
Next Story