பிளாஸ்டிக் தடைசட்டத்தை மாற்றக்கோரி சென்னையில் 13-ந்தேதி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் விக்கிரமராஜா பேட்டி
பிளாஸ்டிக் தடைசட்டத்தை மாற்றக்கோரி சென்னையில் வருகிற 13-ந் தேதி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் வட்டார சிறிய உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்-விற்பனையாளர் நலச்சங்க ஆண்டுவிழா நேற்று நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த விழாவுக்கு சங்க கவுரவத் தலைவர் ஞானதுரை தலைமை தாங்கினார். தலைவர் முத்துராஜா, பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர்கள் பழனிவேல், மூர்த்தி, சட்டஆலோசகர் செல்வம், கவுரவ ஆலோசகர்கள் லட்சுமணன், சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தூத்துக்குடி, விருதுநகர் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் ராஜா, பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாலித்தீன் பைகளுக்கு சரியான மாற்றுப்பொருள் கொண்டு வரும் வரை தடைவிதிக்கும் சட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும். கோவில்பட்டி நகரசபையில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குப்பை வரி இனங்களை குறைக்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் சாலைகளை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பேரமைப்பு செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். துணைச் செயலாளர் தங்கமாரியப்பன் நன்றி கூறினார்.
பின்னர், விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளுக்குள் நுழைந்து கடலை மிட்டாய், பேக்கரி கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை கீழே கொட்டி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாழாக்க கூடாது. வியாபாரிகளிடையே அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வியாபாரிகள் கடைபிடிக்காத சட்டவிதிகளை மாற்ற வலியுறுத்தி வருகிற 19-ந் தேதி புதுடெல்லியில் ஒரு லட்சம் வியாபாரிகள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது. பேரணியை தொடர்ந்து பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களான வால்மார்ட் போன்றவற்றுக்கு துணைபோகும் அதிகாரிகள் குறித்து அரசிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வைப்போம். பிளாஸ்டிக், கேரிப்பை தடை சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பின்னர் முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தவறும் பட்சத்தில் 3 நாட்கள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றத்தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரவுள்ளது. ஆகவே, ஒரு அரசு அமையவேண்டும் என்றால் வியாபாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிலை மாறுகின்றபட்சத்தில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சூழலை எங்கள் வணிக சக்தி உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story