இன்னும் 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளன சவுபாக்யா திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகம் தோல்வி
கர்நாடகத்தில் இன்னும் 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளதாகவும், பிரதமர் மோடியின் சவுபாக்யா திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகம் தோல்வி அடைந்து விட்டதாகவும் மத்திய மின்சாரத்துைறக் குற்றம்சாட்டி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இன்னும் 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளதாகவும், பிரதமர் மோடியின் சவுபாக்யா திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகம் தோல்வி அடைந்து விட்டதாகவும் மத்திய மின்சாரத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
சவுபாக்யா திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி சவுபாக்யா திட்டத்தை அறிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி செய்து கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். கடந்த ஒரு ஆண்டில் இந்த திட்டத்தின் மூலம் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டதற்கான அறிக்கையை ஒவ்வொரு மாநிலத்திடம் இருந்தும் மத்திய மின்சாரத்துறை கேட்டது.
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு வசதி இல்லாத வீடுகளுக்கு மின்சார வசதி செய்து கொடுத்ததற்கான விவரம் மற்றும் இன்னும் மின் இணைப்பு செய்து கொடுக்க வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் அறிக்கையை மத்திய மின்சாரத்துறையிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை பரிசீலித்த மத்திய மின்சாரத்துறை, கர்நாடகத்தில் மட்டும் இன்னும் சுமார் 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் இருப்பதாகவும், அதை மாநில அரசு தெளிவாக குறிப்பிடாமல் 4,500 வீடுகளுக்கு மட்டுமே இன்னும் மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டி இருப்பதாக பொய்யான தகவலை தெரிவித்து இருப்பதாகவும் குற்றம்சாட்டியது.
தோல்வி அடைந்துவிட்டன
பீகார், ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா, கோவா, குஜராத், புதுச்சேரி, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் 100 சதவீதம் மின் வசதி செய்து கொடுத்திருக்கிறது என்றும் கர்நாடகா, உத்தரபிரதேசம், அசாம் ஆகிய 3 மாநிலங்களும் சவுபாக்யா திட்டத்தை செயல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டன என்றும் குற்றச்சாட்டு கூறியது. அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.
இதை கர்நாடக அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் மத்திய மின்சாரத்துறை கடந்த 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உள்ள தகவல்களை வைத்துக் கொண்டு கர்நாடகத்தை குற்றம்சாட்டுகிறது என்றும், மத்திய அரசின் சவுபாக்யா திட்டத்தின் கீழ் கர்நாடகம் 99 சதவீதம் அளவிற்கு மின்சார வசதியை செய்து கொடுத்துள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறது.
99 சதவீதம் மின்சார வசதி...
இதுதொடர்பாக மாநில மின்சாரத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் உத்தர கன்னடா மற்றும் குடகு மாவட்டங்களில் மட்டும்தான் இன்னும் முழுமையான மின்சார வசதி செய்து கொடுக்கவில்லை. மண்டியா, ஹாசன், மைசூரு, சித்ரதுர்கா, ராம்நகர், தாவணகெரே மற்றும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டு விட்டன. அதாவது கர்நாடகத்தை பொறுத்தவரை 99 சதவீதம் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் 2 லட்சம் வீடுகளுக்கு...
இதுபற்றி கர்நாடக மின்சாரத்துறை ஒழுங்குமுறை முன்னாள் கமிஷனர் ஜி.எஸ்.பட்டீல் நிருபர் களிடம் கூறியதாவது:-
சவுபாக்யா திட்டம் வருவதற்கு முன்பு கர்நாடகத்தில் 4.54 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருந்தன. அந்த திட்டம் வந்தபிறகு 2.54 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டி இருக்கிறது.
இதுபற்றி முழுமையான விவரங்களை அறிய மின் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மூலம் மாநில அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்மூலம் எவ்வளவு வீடுகள் மின் இணைப்பு இல்லாமல் இருக்கின்றன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story