மிளகாய்-வெங்காய பயிர்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? கலெக்டர் சந்தீப் நந்தூரி யோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிளகாய் மற்றும் வெங்காய பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி யோசனை தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களில் தென்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரசுவதி தலைமையில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர்கள் ரவி, ராமமூர்த்தி மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் விவசாயிகளுக்கு நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதல் குறித்தும், நோய் தாக்குதலை வரும் முன்பு எவ்வாறு காப்பது, வந்த பின்னர் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கி கூறி உள்ளனர்
மிளகாய் பயிரில் இலைப்பேன் பூச்சிகள் தாக்குதல் குறித்தும், அவை காற்றின் மூலம் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்தும், அதனை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் அகத்தி, ஆமணக்கு மற்றும் மக்காசோளம் பயிர்களை ஊடுபயிர்களாக வளர்ப்பதன் மூலமாக இலைப்பேன் பூச்சிகள் தாக்குதலில் இருந்து ஆரம்ப நிலையில் பயிர்களை பாதுகாக்கலாம் என்றும் அறிவுரைகள் வழங்கினர்.
மிளகாய் பயிரில் இலைப்பேன் பூச்சிகள் ஆரம்பக்கட்ட தாக்குதலில் இருந்து பாதுகாக்க, இயற்கை முறையில் வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்து 10 மில்லி 1 லிட்டர் தண்ணீர் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 50 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனோடு ஒட்டும்திரவம் 15 மில்லி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
மிளகாய் பயிரில் இலைப்பேன் பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் காணப்பட்டால், அதன் இலைகள் சுருண்டு பச்சை நிறத்தை இழந்து சற்றே சிவந்து காணப்படும். இலைகளும் உதிர்ந்துவிடும். இதனை கட்டுப்படுத்த உடனடியாக தியோமெத்தாக்ஜம் 25 டபிள்யு.சி. மருந்து 5 கிராமில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது தயாகுளோர்பைரிட் 20 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மிளகாய் செடிகள் இலை மற்றும் தண்டுகள் நன்கு நனையும்படி மாலையில் தெளிக்கும்போது முழுமையாக பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இந்த மருந்துகளை சரியான அளவில் உரிய நேரத்தில் தெளிக்கும்போது ஊடு பயிராக பயிரிட்டுள்ள வெங்காயத்தில் காணப்படும் ஸ்போடாப்டிரா லிட்டூரா மற்றும் ஸ்போடாப்டிரா எக்ஸிகுவா என்ற புழுக்களின் தாக்கத்தையும் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் நல்ல மகசூலை விவசாயிகள் பெறலாம் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனவே வேளாண் விஞ்ஞானிகளின் இந்த பரிந்துரைகளைப் பின்பற்றி விவசாயிகள் தங்கள் மிளகாய் பயிரைப் பாதுகாத்து அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story