விருப்பாட்சியில் விளையும்: மருத்துவ குணம் நிறைந்த ‘ரோஸ்’ ஆப்பிள்


விருப்பாட்சியில் விளையும்: மருத்துவ குணம் நிறைந்த ‘ரோஸ்’ ஆப்பிள்
x
தினத்தந்தி 10 Dec 2018 3:30 AM IST (Updated: 10 Dec 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

விருப்பாட்சி பகுதியில் மருத்துவ குணம் நிறைந்த ‘ரோஸ்’ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சத்திரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாட்சி தலையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணாயிரம். பட்டதாரியான இவர், விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். இவருடைய தோட்டத்தில், மருத்துவ குணம் நிறைந்த ‘ரோஸ்’ஆப்பிள் பயிரிட்டுள்ளார். தற்போது அவை நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

முந்திரிப்பழ வடிவத்தில் இருக்கும் இந்த ஆப்பிள், ரோஜா இதழ்களின் நிறத்தில் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கிறது. இந்த வகை ஆப்பிள் வெளிமாநிலங்களில் தான் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. அதை விருப்பாட்சியில் பயிரிட்டு, மகசூல் எடுத்தது குறித்து விவசாயி கண்ணாயிரம் கூறியதாவது:-

கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள எனது நண்பர் வீட்டுக்கு சென்றேன். அப்போது, ஒரு தோட்டத்தில் இந்த வகை ஆப்பிள்கள் கொத்துக் கொத்தாக காய்த்து இருந்ததை பார்த்தேன். உடனே அதை விருப்பாட்சியிலும் சாகுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதையடுத்து எனது நண்பர் மூலம் அந்த மரங்கள் வரும் விதம், சூழல் குறித்து தெரிந்து கொண்டேன்.

பின்னர் ஆப்பிள் மரக்கன்றுகளை வாங்கி வந்து எனது தோட்டத்தில் நடவு செய்தேன். தற்போது மரங்கள் நன்கு வளர்ந்து, விளைச்சலையும் அளித்துள்ளது. இந்த வகை மரங்கள் 20 முதல் 24 அடி உயரம் வரை வளர்கின்றன. வெப்பமான இடங்களில் இந்த வகை மரங்கள் நன்கு வளரும். இதன் பழங்கள் சுவையானதாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருக்கிறது. உடலில் செரிமான சக்தியை அதிகரிக்கவும், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story