நெல்லை சரணாலயத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம் ஜன்னலை உடைத்து வெளியேறினர்


நெல்லை சரணாலயத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம் ஜன்னலை உடைத்து வெளியேறினர்
x
தினத்தந்தி 10 Dec 2018 3:45 AM IST (Updated: 10 Dec 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சரணாலயத்தில் ஜன்னலை உடைத்து 7 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு பாலபாக்கியநகரில் சரணாலயம் என்ற பெயரில் ஒரு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களாக உள்ளவர்கள் மீட்கப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்கமிட்டி மூலமாக இவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். தமிழக அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்த காப்பகத்தில் ஏராளமான சிறுவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய 7 சிறுவர்களை, குழந்தைகள் நலக்கமிட்டியினர் மீட்டு நெல்லை சரணாலயத்தில் தங்க வைத்தனர். இவர்களில் ஒருவன் சென்னையை சேர்ந்தவன். மற்ற 6 பேரும் நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர்.நகர், சுத்தமல்லி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று காலையில் சரணாலய ஊழியர்கள் அங்குள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த அந்த 7 சிறுவர்களையும் காணவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில் சரணாலயத்தின் ஜன்னலை உடைத்து அங்கிருந்து வெளியேறி, காம்பவுண்டு சுவர் மீது ஏறி குதித்து தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், தப்பி ஓடிய சிறுவர்களை தேடி சுத்தமல்லி, பேட்டை பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

சரணாலயத்தில் ஜன்னலை உடைத்து 7 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story