வேன் மீது லாரி மோதி பயங்கர விபத்து பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி சாவு சந்திராப்பூரில் பரிதாபம்
சந்திராப்பூரில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாக்பூர்,
சந்திராப்பூரில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
மராட்டிய மாநிலம் சந்திராப்பூரில் உள்ள கோர்பனா- வானி சாலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் டிரைவர் உள்பட 14 பேர் இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் உருக்குலைந்தது. வேனில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
11 பேர் சாவு
விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வேனில் இருந்து டிரைவர் உள்பட 11 பேர் உடல் நசுங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். பலியானவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.
போலீசார் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்து துடித்து கொண்டிருந்த 2 பேரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிர் தப்பிய குழந்தை
இந்த விபத்தில் வேனில் பயணித்த 1 வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியானவர்கள் அனைவரும் யவத்மால் மாவட்டம் வானி தாலுகாவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கோர்பனா பகுதியில் உள்ள பருத்தி ஆலையில் வேலைபார்த்துவிட்டு வீடு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் 11 பேர் பலியான இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story