ஈரோடு ரெயில் நிலையத்தில்: கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா? - பயணிகள் கோரிக்கை


ஈரோடு ரெயில் நிலையத்தில்: கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா? - பயணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:00 PM GMT (Updated: 9 Dec 2018 10:41 PM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு, 

ஈரோடு ரெயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் வந்து செல்கின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஈரோடு வழியாக தினமும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர்.

வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது ஊர்களுக்கு பெரும்பாலும் ரெயிலில் சென்று வருகின்றனர்.

இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவும், பகலும் பயணிகள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் முறையான பராமரிப்பின்றி அந்த கேமராக்கள் பழுதடைந்துவிட்டன. குறிப்பாக ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள தகவல் மையம், டிக்கெட் வழங்குமிடம், நடைமேடைகளுக்கு செல்லும் நுழைவு பகுதி உள்ளிட்ட இடங்களில் கேமராக்கள் செயல்பாடின்றி காணப்படுகிறது.

இதனால் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு பாதுகாப்பை பலப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

ஈரோடு ரெயில் நிலையத்தில் நீண்ட நாட்களாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து நடைமேடைகள் உள்பட ஒருசில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் அனைத்து பயணிகளையும் கண்காணிக்க உதவும் நுழைவு வாயில் பகுதியில் புதிய கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ஏற்கனவே உள்ள கேமராவும் செயல்படாமல் உள்ளது. எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அதிக வருவாய் ஈட்டி தரும் ரெயில் நிலையமாக உள்ள ஈரோட்டிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தின் முன்பு டிஜிட்டல் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அதில் ஈரோட்டிற்கு வரக்கூடிய ரெயிலின் பெயர், வரும் நேரம், புறப்படும் நேரம், நடைமேடை எண் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்படும். இதனால் பயணிகள் ரெயில் நிலையத்தில் நுழையும்போதே தாங்கள் செல்ல வேண்டிய ரெயில் எப்போது வரும், எந்த நடைமேடைக்கு வரும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த அறிவிப்பு பலகை கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. எனவே அந்த அறிவிப்பு பலகையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story