தாளவாடி அருகே: மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
தாளவாடி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.
தாளவாடி,
தாளவாடி அருகே எரகனள்ளி வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிரை நாசப்படுத்தி வருகின்றன.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறின. பின்னர் அருகே எரகனள்ளி கிராமத்தில் உள்ள மல்லப்பா என்பவரின் மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்தன. அதைத்தொடர்ந்து பயிரை காலால் மிதித்தும் தின்றும் நாசம் செய்ய தொடங்கின.
யானைகளின் சத்தம் கேட்டு தோட்டத்துக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த மல்லப்பா திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது யானைகள் நின்று கொண்டு பயிரை சேதப்படுத்தி கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மற்ற விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விவசாயிகள் அங்கு திரண்டனர். பின்னர் அனைவரும் பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. மக்காச்சோள தோட்டத்திலேயே நின்று அட்டகாசம் செய்தன. இதைத்தொடர்ந்து டிராக்டர் உதவியுடன் சத்தம் எழுப்பி விவசாயிகள் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் சென்றன. யானைகளால் சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்கள் நாசம் ஆனது.
அதேபோல் அருள்வாடி கிராமத்தை சேர்ந்த காளப்பா என்பவரது மக்காச்சோள தோட்டத்துக்குள் 3 யானைகள் புகுந்தன. அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த சுமார் ½ ஏக்கர் பயிரை நாசம் செய்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘தினமும் மாலை 7 மணிக்கே வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி எரகனநள்ளி கிராமத்தில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்து பயிரை நாசப்படுத்துகின்றன. எனவே யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகாதவாறு வனத்துறையினர் அகழி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story