வீரியம் குறைந்த மயக்க மருந்து செலுத்தி; 2 யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த முடிவு
வீரியம் குறைந்த மயக்க மருந்து செலுத்தி 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவையை அடுத்த தடாகம், கணுவாய், வரப்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சின்னதம்பி, விநாயகன் ஆகிய 2 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. எனவே இந்த யானைகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆசிய காட்டு யானைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர் அஜய் தேசாய் கோவை வந்து காட்டு யானைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர், அந்த 2 காட்டு யானைகளின் உருவம் மற்ற யானைகளைவிட பெரியதாக இருப்பதால் அவற்றை பிடிப்பது சாத்தியம் இல்லை. வனப்பகுதிக்குள் துரத்திவிடலாம் என்று ஆலோசனை வழங்கினார். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுவாக யானைகளுக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்கள் இனப்பெருக்க காலம் ஆகும். அப்போது ஆண் யானைக்கு காதுகளின் அருகில் இருந்து மதநீர் சுரக்கும். அந்த நேரத்தில் யானை மஸ்துவில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். கும்கி யானைக்கு மஸ்து ஏற்பட்டாலும் அதன் அருகில் செல்ல முடியாது.
அதுபோன்று தான் விநாயகன் என்ற காட்டு யானை தற்போது மஸ்துவில் இருக்கிறது. அதன் உருவம் பெரியதாக இருப்பதாலும், ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதாலும் அதை பிடிப்பது சாத்தியம் இல்லை. அதுபோன்று தான் சின்னதம்பி என்ற யானையும் ஆக்ரோஷமாக இருக்கிறது. எனவே அந்த 2 காட்டு யானைகளுக்கும் வீரியம் குறைந்த மயக்க மருந்து செலுத்தி கும்கி யானைகள் மூலம் வனப்பகுதிக்குள் துரத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மயக்க மருந்து செலுத்தியதும் காட்டு யானைகளின் ஆக்ரோஷம் குறையும். அப்போது கும்கி யானைகள் மூலம் அவற்றை பயமுறுத்தி துரத்தும்போது வனப்பகுதியை விட்டு வெளியே வர வாய்ப்பு இல்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story