திருட்டு நகையை கொடுக்க மறுப்பு:தொழில் அதிபர் கைது
திருட்டு நகையை கொடுக்க மறுத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
வேலூர் அருகே உள்ள காட்பாடி வி.கே.குப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 30 பவுன் நகையை திருடிச்சென்றார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர்.
அவர் மீது தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு வழக்கில் இருந்து சிறையைவிட்டு வெளியே வந்த மணிகண்டன், கேரளாவுக்கு தப்பிச்செல்ல முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரை குனியமுத்தூர் போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதில் அவர் குனியமுத்தூர் பகுதியில் திருடிய 30 பவுன் நகையில் வேலூரில் தொழில் அதிபரான அசோக்குமார் (32) நடத்தி வரும் நகைக்கடையில் 14½ பவுன் நகையை விற்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை வேலூர் அழைத்து சென்றபோது, அந்த நகைக்கடையை அடையாளம் காட்டினார். உடனே போலீசார் அந்த நகைக்கடைக்குள் சென்று அங்கு இருந்த அசோக்குமாரிடம் மணிகண்டன் விற்பனை செய்த 14½ பவுன் திருட்டு நகையை கொடுக்கும்படி கேட்டனர்.
அதற்கு அசோக்குமார் நகையை கொடுக்க மறுப்பு தெரிவித்ததுடன் மணிகண்டன் இங்கு நகையை விற்பனை செய்யவில்லை என்று கூறினார். உடனே போலீசார் அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, மணிகண்டன் அந்த கடையில் நகையை விற்பது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து போலீசார் அசோக்குமாரை கைது செய்ததுடன், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story