கடலூர் புதுப்பாளையத்தில்: தார் சாலை போட்ட ஒரு மாதத்தில் பெயர்ந்து வரும் ஜல்லிக்கற்கள் - தரமானதாக அமைக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
கடலூர் புதுப்பாளையத்தில் தார் சாலை போட்ட ஒரு மாதத்திலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகிறது. இதனை தரமானதாக அமைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் கூட்டுறவு நகரில் செவ்வந்தி வீதி உள்ளது. நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் அமைந்துள்ள இந்த வீதியில் உள்ள சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதன் காரணமாக அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். வாகன ஓட்டிகள் வேறு வழியாக சென்று வந்தனர்.
தாழ்வான இந்த வீதியில் மழை பெய்தாலே அங்குள்ள காலி மனைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். கன மழை பெய்தால் தண்ணீர் அனைத்தும் சாலைகளில் தேங்கி நிற்கும். இதனால் அந்த சாலை மேலும் சேதமடைந்து வந்தது. இதையடுத்து அந்த சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் புதிதாக தார் சாலை போடப்பட்டது. ஆனால் இந்த சாலை பெயரளவுக்கு தான் போடப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே சேறும், சகதியுமாக இருந்த சாலையில் உள்ள மண்ணை முழுமையாக அப்புறப்படுத்தாமல், அதன் மேல் சாலை அமைத்ததாக தெரி கிறது. இதன் காரணமாக அந்த சாலை அமைத்து ஒரு மாதத்திலேயே மீண்டும் சேதமடைந்து காணப்படுகிறது.
பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீரும் சாலை அருகே தேங்கி நிற்கிறது. சில இடங்களில் சாலை உள்வாங்கியும் காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை பெயரளவிற்குதான் போடப்பட்டுள்ளது. பழைய சாலையை கிளறி விடாமலேயே, அதன் மேல் பகுதியில் தார்சாலை போட்டுள்ளனர். தரமாக போடாததால் ஒரு மாதத்திலேயே தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகிறது. எனவே இந்த சாலையை தரமான சாலையாக அமைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story