இருபிரிவாக பிரிந்துள்ள நம்பேடு கிராமத்தை தனி ஊராட்சியாக அமைத்து கொடுக்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


இருபிரிவாக பிரிந்துள்ள நம்பேடு கிராமத்தை  தனி ஊராட்சியாக அமைத்து கொடுக்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 11 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 7:28 PM IST)
t-max-icont-min-icon

இருபிரிவாக பிரிந்துள்ள நம்பேடு கிராமத்தை தனி ஊராட்சியாக அமைத்து கொடுக்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும், கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் பொதுமக்களிடமும் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இதில் வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 500–க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை கலெக்டர் கந்தசாமி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலசபாக்கம் தாலுகா எர்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் கிராமத்தில் சுமார் 250 வீடுகள் உள்ளன. எங்கள் கிராமத்தில் சுடுகாட்டு பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக சென்று வருவதால் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் தடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சுடுகாட்டு பாதை அமைக்க சர்வே செய்து இதுவரை பாதை அமைத்து தரவில்லை.

எங்கள் பகுதியில் சுடுகாட்டு பாதை அமைக்க அரசு புறம்போக்கு கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் ஏரி கால்வாய் உள்ளது. இதன் வழியாக எங்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத்து கொடுத்தால் எங்கள் பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுடுகாட்டு பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சேத்துப்பட்டு தாலுகா ராந்தம், தெள்ளூர், மதுரைபெரும்பட்டூர் ஆகிய கிராம மக்கள் கொடுத்த மனுவில், ஆற்காடு – விழுப்புரம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் வழியில் ஆற்றங்கரை என்னும் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து தேவிகாபுரம் செல்லும் சாலை பிரிகிறது. இந்த ஆற்றங்கரை பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். மேலும் ராந்தம், தெள்ளூர், மதுரைபெரும்பட்டூர், கனகம்பட்டு ஆகிய 4 கிராமங்களுக்கும் போக்குவரத்திற்கு இந்த பஸ் நிறுத்தம் தான் உள்ளது. மேலும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நடுப்பட்டு கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் கிராமம் ஆரணி சட்டமன்ற தொகுதி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதி என இருபிரிவுகளாக பிரிந்து உள்ளது. இதில் ஆரணி சட்டமன்ற தொகுதியில் 871 வாக்காளர்களும், போளூர் சட்டமன்ற தொகுதியில் 228 வாக்களர்களும் மொத்தம் 1,099 வாக்களர்களும் உள்ளனர்.

எங்கள் கிராமம் இருபிரிவாக பிரிந்து உள்ளதால் எங்களின் பிரதிநிதிகளை எங்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மேலும் எங்கள் கிராமத்தின் அடிப்படை தேவைகளை எங்களால் பூர்த்தி செய்யப்பட முடிவதில்லை. எனவே எங்கள் கிராமத்தை ஒன்றிணைத்து தனி ஊராட்சி அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story