அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் ஏ.சி.க்கள் பழுது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் ஏ.சி.க்கள் பழுதடைந்துள்ளத. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை, கண், அவசர சிகிச்சை, பெண்கள், குழந்தைகள், தொழுநோய், சித்தா, ஹோமியோ, அம்மா காப்பீடு திட்ட வார்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது. மேலும் 200–க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 200–க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தினமும் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட தனி வார்டில் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வார்டில் 2 ஏ.சி.க்கள் பொருத்துப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக ஏ.சி.க்களில் பழுது ஏற்பட்டு இயங்காமல் உள்ளது.
இதுகுறித்து நோயாளிகள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் உள்ள ஏ.சி.க்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா கூறுகையில், ‘அரக்கோணம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது திறக்கும் நிலையில் உள்ளது. அந்த கட்டிடம் திறந்தவுடன் மருத்துவமனையில் உள்ள பல பிரிவுகள் புதிய கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்படும். அதில் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டு மாற்றப்பட உள்ளது. தற்போது அந்த வார்டில் ஏ.சி.க்கள் இயங்காதது குறித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் பழுது நீக்கி தருவதாக கூறி உள்ளனர்’ என்றார்.