அரக்கோணத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து


அரக்கோணத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து
x
தினத்தந்தி 11 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 7:51 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மாடுகளின் கொம்புகளில் சிறப்பு நிற ரிப்ளேக்டர் ஸ்டிக்கர்களை ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரக்கோணம்,

அரக்கோணம் நகரம், வெங்கடேசபுரம், பெருமுச்சு, அம்மனூர், வடமாம்பாக்கம், பாப்பான்குட்டை, கீழ்க்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை தினமும் காலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். மாடுகள் குளம், குட்டை, ஏரி பகுதிகளில் மேய்ந்துவிட்டு மாலை நேரங்களில் வீட்டிற்கு சென்று விடுகிறது.

வீட்டிற்கு செல்லாத மாடுகள் அரக்கோணம் நகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மார்க்கெட், ரெயில் நிலையம், பழனிப்பேட்டை, சுவால்பேட்டை, அவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் கிடக்கும் காய்கறி கழிவுகள் சாப்பிட்டு விட்டு செல்கிறது.

சாலையில் மாடுகள் செல்வதால் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்களில் செல்பவர்கள் பிரேக் போட்டு அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர்.

இரவில் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளில் இருந்து கழிவு பொருட்களை வெளியே கொட்டி வைத்துவிட்டு கடையை மூடிவிட்டு செல்வதால் மாடுகள் கூட்டம், கூட்டமாக சென்று கழிவுகளை சாப்பிட்டு விட்டு சாலையில் ஆங்காங்கே படுத்து தூங்கி விடுகிறது. கருப்பு நிறத்தில் உள்ள மாடுகள் சாலையில் தூங்கும் போது மாடுகள் சாலையில் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விடுகின்றனர். இதுபோன்ற விபத்துகள் அரக்கோணம் நகரத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.

இதை தடுக்க போலீசார் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் சிவப்பு நிற ரிப்ளேக்டர் ஸ்டிக்கர்களை ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ரிப்ளேக்டர் ஸ்டிக்கர் ஓட்டினால் தூரத்தில் இருந்து வாகனங்களில் ஸ்டிக்கர் வெளிச்சம் தெரிந்து வாகனத்தை மெதுவாக இயக்கி விபத்தில் இருந்து தப்பித்து கொள்ள முடியும்.

போர்க்கால அடிப்படையில் மாடுகளின் கொம்புகளில் ரிப்ளேக்டர் ஸ்டிக்கர் ஓட்டி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story